இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற பாடலுக்கேற்ப கிராமிய, நாட்டுப்புற பக்தி பாடல்களால் பெருமை பெற்ற பாடகி திருமதி. பஞ்சவர்ணம் அவர்களை தானே எழுதி மெட்டமைத்த அம்மன் பாடல்களை அசத்தலாக உரத்த குரலில் பாடி, மதுரை வில்லாபுரத்திலுள்ள அவரது சிறிய வீட்டில் பூஜித்துக் கொண்டிருந்தார். அவரின் வழிபாட்டை பார்த்து நாம் மெய் சிலிர்த்திருந்தோம்.
வழிபாட்டை நிறைவு செய்ததும் சகோதர பாசத்துடன் நம்மை வரவேற்ற பாடகியிடம் நமது உரையாடலைத் தொடர்ந்தோம்.
நீங்கள் பிறந்த ஊர், தாய்- தந்தை, குடும்ப விவரம் பற்றி சொல்லுங்கள்?
"அப்பா சின்னச்சாமி. அம்மா முனியம்மா. பரமக்குடி அருகில் உள்ள கீழத்தூர் கிராமம் சொந்த ஊர். பெற்றோர் ஏழை விவசாயிகள். உடன்பிறந்தோர் நான்கு அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு தங்கை. எல்லாரும் திருமணமாகி குழந்தை குட்டிகள், பேரன்- பேத்திகள் எடுத்து நன்றாக இருக்கிறார்கள். நாங்கள் அன்றும் இன்றும் என்றும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
என் கணவர் சுப்பிரமணியன். ஆட்டோ டிரைவராக இருக்கிறார். பெரிய மகன் பழனி முருகன். அவரும் ஆட்டோ ஓட்டுநர்தான். அவர் மனைவி மணிமேகலை பி.எஸ்.சி., பி.எட்., பட்டதாரி. பேத்தி சத்ய ஸ்ரீ. பேரன் சஷ்டி சரவணன். ஒரே மகள் காளிகா பி.காம் பட்டதாரி.. மருமகன் முனீஸ்வரன் இன்ஜினியராக பெங்களூரில் வேலை பார்த்துவருகிறார்.
அவர்களுக்கு ஒரு பெண். ஒரு பையன், இளைய மகன் பெயர் புண்ணியவேல். பி.சி.ஏ பட்டம் படித்து குவைத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அனைவரையும் கவரும் கணீர் குரல் பெற்ற நீங்கள், பக்தி பாடகியானது எப்படி?
"கடவுள் அருளால் இயற்கையிலேயே எனக்கு மிக நல்ல குரல்வளம் அமைந்திருந்தது. எங்கள் குடும்பத்தில் எல்லோரும் அதிதீவிர கடவுள் பக்தர்கள். எனக்கு பதினைந்து வயதிலேயே திருமணமாகிவிட்டது. நானும் என் கணவரும் பிழைப்பிற்கு தூத்துக்குடி வந்து கடுமையான கூலி வேலைகள் செய்துவந்தோம். பிறகுதான் மதுரை வந்து என் கணவர் ஆட்டோ ஓட்டுநராகி சம்பாதிக்க துவங்கினார். நான் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்ததால் வேலைக்கு போகவில்லை. நான் சிறுமியாக இருந்தபோதே எங்கள் கிராமத்து தானானே, தானானே என்ற கும்மிப்பாட்டு குழுவினருடன் பாடுவேன். அதில் என் குரல் மட்டும் தனியாக ஜொலிக்கும். பலரும் பாராட்டி அப்போதே பணம், பரிசுகளை தந்து "பாப்பா... நீ எதிர்காலத்தில் பெரிய பக்தி பாடகியாக நிச்சயம் வருவாய் என்று வாழ்த்தி செல்வார்கள். அது இப்போது பலித்துவிட்டது.
எங்கள் குலதெய்வம் கடுசந்தை சண்முகநாதனின் பக்தை நான். அந்த தமிழ் தெய்வம் முருகப்பெருமான் பேரருளோடு ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை நானே சுயமாக எழுதி கோவில் திருவிழாக்களில், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில், பிறந்த நாள் கொண்டாட்டங்களில், இல்லங்களின் புதுமனை புகுவிழா தெய்வ வழிபாடுகளில் கிராமிய, "நாட்டுப்புற பாணி' பக்தி பாடல்களை பாடிவருகிறேன்.
என் இஷ்ட தெய்வங்கள் மேல்மருவத் தூர் ஆதிபராசக்தியும், சமயபுரம் மாரியம்ம னும்தான்.
இருபது வருடங்களாக இருமுடி கட்டி, மேல்மருவத்தூர் சென்று, ஆதிபராசக்தி அம்மன் மற்றும் அம்மா பங்காரு அடிகளார் சித்தர் அருளைப் பெற்று வருகிறேன். எல்லோர் மனதிலும் பக்தியை மென்மேலும் பெருக செய்வது எனக்கு மிகவும் பெருமை தரும் விஷயமாகும். மேல்மருவத்தூர் பக்தர்களுடன் பஸ், ரயிலில் செல்லும்போது அம்மன் பாடல்களை இடைவெளியின்றி ஆறு மணி நேரம் வரைகூட நான் பாடி செல்வது உண்டு.
அம்மா உங்கள் பக்தி பாடல்களை கேட்டாலே பெரும் புத்துணர்ச்சி பிறக்கிறது. என்று பலரும் என்னிடம் கூறும்போது எனக்கு ஆத்ம திருப்தி கிடைத்துவிடும். நம் பக்தி பாடல்களால் பலரை பரவசம் அடைய வைக்க முடிகிறதே என்று மகிழ்ச்சி அடைவேன்.
எங்களுக்கு திருமணமாகி ஐந்து வருடம் குழந்தை பாக்கியம் இல்லாமல், மனம் வேதனைப்பட்டோம். அப்போது பழனி ஆண்டவரின் வேண்டுதலால், மூத்த மகன் பிறக்க அவருக்கு "பழனி முருகன்' என்றே பெயர் வைத்தோம்.
முருகப் பெருமானுக்கு நன்றி கூறும் விதமாக நாங்கள் குடும்பத்துடன் 35 வருடமாக பழனிக்கு பாத யாத்திரை சென்றுவருகிறோம். ஆதித்தமிழ் தெய்வம் முருகப் பெருமான்மீது பாடல்கள் எழுதி, நானே மெட்டமைத்து பாடியும் வருகிறேன்.
எனது அம்மன் பாடல்கள்போல் முருகப் பெருமான் பாடல்களுக்கும் பிரம்மாண்டமான வரவேற்பு, பாராட்டு கிடைத்து வருகிறது. கருப்பணசாமி, முனீஸ்வரன், பாண்டி தெய்வம், அய்யனார் பாடல்களை எழுதி பாடியும் வருகிறேன்.
ஒரு கோவில் விழாவில் நான் பாடச் சென்றபோது, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களுக்கு நான் எப்படி பாடுவேனோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. விழா மைதானத்தில் வெகு சிலரே இருந்தார்கள். நான் வேகமெடுத்து பாடப்பாட, ஊர் முழுக்க கட்டப்பட்ட ஒலிபெருக்கியில் என் பாடலைக் கேட்டு ஊர்மக்கள் எல்லோரும் கோவில் மைதானத்தில் கூடி கைதட்டி, ஆட்டம் ஆடி வெகுவாக ரசிக்க துவங்கிவிட்டார்கள்.
இதில் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் அந்த கிராம மக்கள் எல்லோருமே என் பக்தி பாடல்களை கேட்டு சாமி ஆடத் துவங்கிவிட்டார்கள். அவர்களை மலையேற்ற பெரிதும் சிரமப்பட வேண்டி வந்துவிட்டது.
இப்படி ஒரு ஊரே என் பக்தி பாடல்கள் கேட்டு சாமி வந்து ஆடியதை என்னால் என்றும் மறக்க முடியாது.
இசையால் வசமாகாத இறைவனும் இல்லை; மனிதனும் இல்லை என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்து உன்னத பணி ஆற்றிவரும் பஞ்சவர்ணம் சகோதரிக்கு தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களும் வாய்ப்பு தந்து பஞ்சவர்ணத்தின் பசுமையான பக்திக் குரலை பார் முழுக்க கேட்கவைக்க வாழ்த்து கூறி, பக்தி பாடல்கள் மட்டுமின்றி மற்ற பாடல்களையும் பாடி புகழ்பெறவாழ்த்தி விடைபெற்றோம்.
கிராமிய, நாட்டுப்புற பக்தி பாடல்கள் நிகழ்ச்சிக்கு திருமதி. பஞ்சவர்ணம் அவர்களை அழைக்க தொடர்பு எண்: 98657 25855
பேட்டி, படங்கள்: கோதைலட்சுமி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/mugu-2026-01-30-13-11-38.jpg)